உள்ளூர் செய்திகள்
அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடியதால் இயல்புநிலை திரும்பியது
வேலூர் உட்பட 4 மாவட்டங்களில் அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடியதால் இயல்புநிலை திரும்பியது.
வேலூர்:
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை கள் தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நேற்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த போராட்டம் காரணமாக நேற்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 75 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. மொத்தமுள்ள 614 பஸ்களில் 100-க்கும் குறைவான பஸ்கள் மட்டுமே மட்டுமே இயக்கப்பட்டன. 2-வது நாளான இன்று 90 சதவீதத்துக்கு மேல் பஸ்கள் இயக்கப்பட்டன.
வேலூரில் இருந்து சென்னை செல்லக் கூடிய அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு, திருவண்ணாமலை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடிய பஸ்கள் கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடிய பஸ்களும் வழக்கம் போல ஓடியது.
இதேபோல திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று அனைத்து பஸ்களும் ஓடியது.இதனால் இயல்புநிலை திரும்பியது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. இன்று ஏராளமான ஆட்டோக்கள் ஓடியது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் வங்கி ஊழியர்கள் உள்ளனர். இதில் இன்று 2- வது நாளாக 1,300 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வங்கி அலுவலகங்கள் பணி யாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப் பட்டது. 2 நாட்களில் ரூ.400 கோடி வரை வங்கி பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டது.
தபால் நிலையங்களில் பெரும்பாலான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சிறிய தபால் அலுவலகங்கள் இன்று 2-வது நாளாக மூடப்பட்டிருந்தன இதனால் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் இன்று 90 சதவீதத்துக்கு மேல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
வங்கி மற்றும் மத்திய அரசு அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டன.