உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தந்தை-மகனை தாக்கி மளிகை கடை சூறை

Published On 2022-03-29 11:32 IST   |   Update On 2022-03-29 11:32:00 IST
கடனுக்கு பொருட்கள் வாங்கியதில் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் மளிகை கடையை சூறையாடி தந்தை-மகனை தாக்கினர்.
புதுச்சேரி:

புதுவை வேல்ராம்பட்டு துளுக்கானத்தம்மன் நகர்  4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது39). இவர் தனது வீட்டின் தரை தளத்தில் தந்தை சுகுமாறன் மற்றும் தம்பி அன்பு ஆகியோருடன் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே மளிகை கடையில் அன்பு இருக்கும் போது  அவரிடம் அதே பகுதியை சேர்ந்த சக்தி என்பவர் ரூ-.3 ஆயிரத்து 800-க்கு கடனில் மளிகை பொருட்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் 6 மாதம் ஆகியும் அந்த பணத்தை சக்தி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து கிருபாகரன் தனது தம்பியிடம் கடனுக்கு வாங்கிய பொருட்களுக்கான பணத்தை கொடுக்கும்படி சக்தியிடம் கேட்டு வந்தார். அப்போது அந்த  பணத்தை அதே பகுதியை சேர்ந்த கல்வி செல்வம் என்பவர் தருவதாக அன்புவிடம் உறுதியளித்தார்.

ஆனால் கல்வி செல்வமும் பணத்தை கொடுக்கவில்லை. இதையடுத்து அன்பு, சக்தியிடம் கல்விசெல்வம் பணம் கொடுக்காததால்  நீதான் தரவேண்டும் என்று கூறினார். இதனால் சக்தி ஆத்திரத்தில் அங்கிருந்து சென்று விட்டார்.

கிருபாகரன் மளிகை கடையில் இருக்கும் போது கல்வி செல்வம் மற்றும் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் இனிமேல் சக்தியிடம் பணம் கேட்ககூடாது, அதனை மீறி கேட்டால் நடப்பதே வேறு என்று கூறி அங்கு கிடந்த கல்லை எடுத்து கிருபாகரனை தாக்கினர்.
 
மேலும் மளிகை கடையில் பாட்டில்களில் உள்ள பொருட்களை தூக்கி போட்டு உடைத்து சேதப்படுத்தினர். இதனை கண்ட கிருபாகரன் தந்தை சுகுமாறன் அந்த கும்பலை தட்டிக்கேட்டார். அவரையும் அந்த கும்பல் தாக்கியது. 

மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது.  இதுபற்றி தகவல் அறிந்த அன்பு  உடனே வீடு திரும்பினார்.

பின்னர் காயமடைந்த தனது தந்தை சுகுமாறன் மற்றும் சகோதரர் கிருபாகரன் ஆகியோரை மீட்டு ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் இது குறித்து  சுகுமாரன் முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைண நடத்தி வருகிறார்கள்.

Similar News