உள்ளூர் செய்திகள்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பிளேடால் கழுத்தை அறுக்க முயன்ற விவசாயி
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பிளேடால் கழுத்தை அறுக்க முயன்ற விவசாயி பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது. இதில் ஒடுக்கத்தூர் அருகே உள்ள அத்திகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த தருமன் (வயது 70). என்பவர் மனு கொடுக்க வந்தார்.
திடீரென அவர் தான் பையில் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து தனது கழுத்தை அறுக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். என்னை சாக விடுங்கள். நான் இங்கேயே தான் சாகவேண்டும்.
இந்த பிளேடு இல்லை என்றால் என்ன நான் வேறு பிளேடை எடுத்து வந்து இங்கே தற்கொலை செய்து கொள்வேன் என ஆவேசமாக அவர் பேசினார் போலீசார் அவரை சமாதானம் செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எனது பங்காளி நிலத்தை ஒருவர் வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.அதில் எனக்கு சொந்தமான நிலம் உள்ளது.இது குறித்து வருவாய் துறை அதிகாரியிடம் கேட்டபோது உனது பெயரில் நிலம் இல்லை என கூறுகின்றனர்.
இதற்கு சரியான முடிவு எடுக்க வேண்டும் என் மீட்டு நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார். இதனால் கலெக்டர் ஆபீசில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
குடியாத்தம் நெல்லூர்பேட்டை பாவோடும் தோப்பு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காந்தி வேடம் அணிந்த ஈரோடு சண்முக காந்தி என்பவருடன் மனு கொடுக்க வந்தனர். பாவடோம்தோப்பு கவுண்டன்ய ஆற்றங்கரையில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. தற்போது ஆற்றில் நீர்வரத்து பகுதிகளில் உள்ள வீடுகளை இடித்து வருகின்றனர்.
எங்கள் பகுதியில் இருந்து பள்ளி கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்வி ஆண்டு நிறைவடையும் வரையில் எங்களது வீடுகளை இடிக்க கூடாது. அது வரை கால அவகாசம் தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வேலூர் அருகே உள்ள இலங்கை தமிழர் குடியிருப்பை சேர்ந்த பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு 5 பவுனுக்கு குறைவான வேளாண் வங்கிகளில் நகைக் கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளது. இந்த திட்டத்தில் எங்களுடைய பெயர்கள் விடுபட்டுள்ளன.
இது சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாங்கள் பெற்றுள்ள வங்கிக்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.