உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே குடும்பத்தகராறில் பெண் தீக்குளிப்பு
பண்ருட்டி அருகே குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு பலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 32). டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி காயத்ரி (24).
இன்று காலை கணவன்- மனைவி இருவரும் டீக்கடையை திறந்து வியாபாரத்தை தொடங்கினர். அப்போது கணவன்- மனைவி இருவருக்குமிடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இதில் காயத்ரியை கோபத்தில் திட்டிய முரளி கடையை விட்டு வெளியே சென்று விட்டார். இதனால் காயத்ரி மனமுடைந்தார்.
உடனே கடையில் இருந்து வீட்டுக்கு சென்ற அவர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்து கொண்டார். காயத்ரியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.