உள்ளூர் செய்திகள்
காட்பாடி டெல் வளாகத்தில் புதிய தொழிற்சாலை
காட்பாடி டெல் வளாகத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்:
வேலூர் அடுத்த பிரம்மபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர் களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர் ஆனந்த் எம்.பி., கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடிக்காண சான்றிதழ்களை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
அவர் பேசியதாவது:-
நான் இருக்கும் வரை காட்பாடி தொகுதிக்கு ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். கிராமப்புறங்களில் இருந்து மாணவர்கள் வேலூரில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களின் சிரமத்தை போக்குவதற்காக வள்ளிமலையில் விரைவில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவரப்படும்.
பொன்னையில் விரைவில் அரசு ஆஸ்பத்திரியும், விளையாட்டு மைதானம் கொண்டு வரப்படும். காட்பாடி தொகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 100 ஏக்கர் தேர்வு செய்யப்பட உள்ளது.
இதேபோல் காட்பாடியில் உள்ள டெல் நிறுவனம் மூடப்பட்டுள்ளதால் அதில் புதியதாக தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் காட்பாடியில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.
முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதில் ஒரு திட்டம் தான் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி. நீங்கள் வைத்த நகைக்கான அசல் மற்றும் வட்டி இல்லாமல் உங்களிடமே பத்திரமாக திருப்பித் தரப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பதுரை உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.