உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்

கறம்பக்குடியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-03-26 13:16 IST   |   Update On 2022-03-26 13:16:00 IST
ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறம்பக்குடியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:

கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அந்த மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஹிஜாப் தடை செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கண்டணம் தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கறம்பக்குடி ஜமாத் கமிட்டி சார்பில் ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக கறம்பக்குடி பெரிய பள்ளிவாசலில் இருந்து கண்டன ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் பள்ளிவாசல் தெரு, தட்டாரதெரு, கடை வீதி வழியாக சென்று கறம்பக்குடி பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது.

பின்னர் இங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட திரளான முஸ்லிம்கள்  கலந்து காண்டு ஹிஜாப் அணிய ஆதரவு தெரிவித்தும், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

 ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வடிவேல் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கறம்பக்குடி காவல்துறை அனுமதி வழங்காததால் திடீரென்று நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற தாகக் கூறி போலீசார் 895 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News