உள்ளூர் செய்திகள்
அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சிவப்பு நிற மண்பானையை காணலாம்

மாளிகைமேட்டில் 2-வது கட்ட அகழாய்வில் பழங்கால மண்பானை, செங்கல் சுவர் கண்டுபிடிப்பு

Published On 2022-03-26 09:01 IST   |   Update On 2022-03-26 09:01:00 IST
மாளிகைமேட்டில் நடந்து வரும் 2-வது கட்ட அகழாய்வில் பழங்கால மண்பானை, செங்கல் சுவர் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேடு பகுதியில் தமிழக அரசு தொல்லியல் துறையின் சார்பில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியின்போது கடந்த 4-ந் தேதி பழங்கால செப்பு காப்பு கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் தங்க காப்பு என்று கூறப்பட்ட நிலையில், அதன் மீதான ஆராய்ச்சியை தொடர்ந்து அது செப்பு காப்பு என்பது தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த அகழாய்வு பணியின்போது பழங்கால மண்பானை, மண்ணாலான கெண்டி செம்பின் மூக்குப்பகுதி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அகழாய்வு பணியில் முதல்முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த சிவப்பு நிற மண்பானை 25 செ.மீ. உயரமும், 12.5 செ.மீ. அகலமும் கொண்டதாகும். தரையில் இருந்து 18 செ.மீ. ஆழத்தில் இந்த பானை கிடைக்கப்பெற்றது. அந்த பானையின் ஒரு பகுதி சிறிது உடைந்த நிலையில் காணப்பட்டது.

மேலும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால அரண்மனையின் தொடர்ச்சியாக தற்போது 22 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட பானை போன்றவை எத்தனை ஆண்டுகள் பழமையானவை என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என ெதால்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வெட்டு ஆதாரங்களின் உதவியுடன், மாளிகைமேட்டில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட அகழ்வாராய்ச்சியின்போது செங்கல் அமைப்பு மற்றும் ஏராளமான அலங்காரத்துடன் கூடிய கூரை ஓடுகள், அரண்மனையின் கட்டமைப்பு எச்சங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்த அகழ்வாராய்ச்சி பணியில் கிடைத்த பழங்கால பொருட்களில் சீன மண்பாண்டங்கள், செப்பு நாணயங்கள் மற்றும் செம்பு பொருட்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் ஆகியவையும் அடங்கும். மேலும் தொடர்ந்து நடைபெறும் அகழாய்வு பணியில் பல்வேறு பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Similar News