உள்ளூர் செய்திகள்
மேயர் சுந்தரிராஜா வணிகர்களுக்கு மஞ்ச பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

மஞ்சப்பைகள் பயன்படுத்தி பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்- மாநகராட்சி மேயர்

Published On 2022-03-25 15:46 IST   |   Update On 2022-03-25 15:46:00 IST
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை முழுவதுமாக தவிர்த்து கடலூர் மாநகராட்சியை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாநகராட்சியாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாநகராட்சி மேயர் கூறினார்.
கடலூர்:

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டியும், மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தியும் விழிப்புணர்வு கூட்டம் வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதுமாக பயன்படுத்துவதை வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் மாசு ஏற்பட்டு, பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் உருவாகும்.

மேலும் பொதுமக்கள், வணிகர்கள் வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் பொருட்கள் வாங்கச் செல்லும்போது கண்டிப்பாக மஞ்சப்பை கொண்டு செல்ல வேண்டும்.

இதன் மூலம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது முழுவதுமாக தவிர்த்து கடலூர் மாநகராட்சியை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாநகராட்சியாக மாற்ற அனைவரும் தமிழக முதலமைச்சர் உத்தரவை கடைபிடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநகராட்சி ஆணையாளர் விசுவநாதன், பொறியாளர் பொறுப்பு மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளர் ராஜா, வணிகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News