உள்ளூர் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் யூரியா பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை
வேலூர் மாவட்டத்தில் யூரியா பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் அளித்தனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட வேளாண் அலுவலர் மகேந்திர பிரதாப் தீக்சித் மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் யூரியாவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தால் அதனை விற்பனை செய்பவர்கள் மிரட்டல் விடுக்கின்றனர்.
மேல் அரசம்பட்டு ஆற்றில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயிகளுக்கு முறைகேடு இல்லாமல் மானிய விலையில் டிராக்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மொபைல் வேன் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
ஊசூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளர்கள் பலர் வேலைக்கு செல்வதால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.
விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வரும் 2 மாதங்களுக்கு 100 நாள் வேலை திட்ட பணிகளில் யாருக்கும் வேலை வழங்கக்கூடாது. அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.