உள்ளூர் செய்திகள்
ஆதார் அட்டை

விவசாயிகள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டும்- கடலூர் கலெக்டர் அறிவுரை

Published On 2022-03-25 14:58 IST   |   Update On 2022-03-25 14:58:00 IST
தற்போது விவசாயிகள் வருகின்ற ஏப்ரல் 2022 முதல் ஜூலை 2022 வரையுள்ள காலத்திற்கான 11-வது தவணைத் தொகையைப் பெறுவதற்கு தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பது கட்டாயமாகும்.
கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கவும், இதர வேளாண் பணிகளுக்காகவும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 1,82,811 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

தற்போது விவசாயிகள் வருகின்ற ஏப்ரல் 2022 முதல் ஜூலை 2022 வரையுள்ள காலத்திற்கான 11-வது தவணைத் தொகையைப் பெறுவதற்கு தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பது கட்டாயமாகும்.

மத்திய அரசு தற்போது பி.எம்.கிசான் திட்ட நிதி விடுவிப்பில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதுவரை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக நிதி விடுவிப்பு செய்து வந்த நிலையில், இனி திட்ட நிதியானது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும். தற்போது விவசாயிகள் 11-வது தவணைத் தொகை (01.04.2022 முதல் 31.07.2022 வரை) பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி எண்ணோடு இணைப்பது கட்டாயமாகும்.

எனவே விவசாயிகள் உடனடியாக தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளைக்கு ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் சென்று வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள வேண்டும்.

இதுவரை ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகில் உள்ள இ- பொது சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்கள் ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து தங்களின் விரல் ரேகையினை பதிவு செய்து விவரங்களைப் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதித்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் ஆதார் எண்கள் மற்றும் வங்கிக்கணக்குகளை அருகாமையில் உள்ள இ-சேவை மையம் மற்றும் வங்கிகளுக்கு நேரில் சென்று வரும் மே மாத இறுதிக்குள் பதிவு செய்து தொடர்ந்து இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Similar News