உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் பட்டப்பகலில் பாம்பு செல்லும் காட்சி.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் படையெடுக்கும் பாம்புகளால் ஊழியர்கள் அச்சம்

Published On 2022-03-24 16:33 IST   |   Update On 2022-03-24 16:33:00 IST
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் படையெடுக்கும் பாம்புகளால் ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அலங்கார செடிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இதில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

எப்போதும் பூட்டியே கிடக்கும் இந்த பூங்கா பகுதியில் தற்போது பாம்புகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோடை காலம் தொடங்கியுள்ளதால் வெயிலின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் செடி, கொடி மற்றும் மண்டிக்கிடக்கும் புதர்களில் வசித்த பாம்புகள் அருகில் உள்ள கட்டிடங்களை நோக்கி படையெடுக்கத் தொங்கியுள்ளன.

கடந்த வாரம் நாகபாம்பு ஒன்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆவின் டீக்கடை அருகே பட்டப்பகலில் உலா வந்தது. 

இதனைக்கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். பொது மக்கள் சத்தம் போட்டதால் அங்கிருந்த பூங்கா பகுதிக்குச் சென்று விட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் முன் பகுதியில் வாகனம் நிறுத்தும் இடத்தில் இரவு பாம்பு ஒன்று அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது. 

நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் போர்ட்டிகோ பகுதிவரை நாகபாம்பு ஒன்று வேகமாக வந்தது.

அங்கிருந்த பெண் போலீசாரை பார்த்ததும் நாகபாம்பு போர்டிகோ ஒட்டியுள்ள சிறிய கால்வாய்க்குள் சென்று விட்டது. 

இதேபோல பி' பிளாக் நுழைவாயில் அருகிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீளமான பாம்பு ஒன்று சுற்றித் திரிந்ததை அங்கிருந்த ஊழியர்கள் பார்த்தனர். 

கலெக்டர் அலுவலக பூங்காவில் பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக பூங்கா பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மாலை 6.30 மணிக்கு பிறகு பலர் வீடுகளுக்கு திரும்புகின்றனர். தற்போது மாலை நேரங்களில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அவர்கள் அச்சமடைந் துள்ளனர். 

ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும் முன்பு கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் பாம்புகளை பிடித்து காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Similar News