உள்ளூர் செய்திகள்
ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது

வேலூரில் இரவு நேர ஆட்டோக்களில் தீவிர சோதனை

Published On 2022-03-24 16:32 IST   |   Update On 2022-03-24 16:32:00 IST
வேலூரில் இரவு நேர ஆட்டோக்களில் தீவிர சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூரில் கடந்த 17-ந் தேதி இரவு காட்பாடியில் உள்ள தனியார் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்த பெண் மற்றும் அவருடன் வந்த ஆண் நண்பரை பயணிகள் ஆட்டோ என கூறி கடத்தி சென்று பணம், நகை, செல்போனை ஆகிவற்றை பறித்துக்கொண்டு, அப்பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தனர்.

இச்சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பார்த்திபன், கூலி தொழில் செய்யும் மணிகண்டன், பாலா என்கிற பரத், சந்தோஷ் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்தனர். 

அவர்களில் 4பேரை மத்திய சிறையிலும், சிறுவனை சென்னை கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் இரவு நேரம் முழுவதும் வாகனம் மற்றும் பொது மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க எஸ்.பி ராஜேஷ் கண்ணண் உத்தரவிட்டார்.  வேலூர் மாநகரம் முழுவதும் ரோந்து பணிகள் தீவிரமாக்கப்பட்டன. 

மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சந்திப்புகளில் காவலர்கள் நிறுத்தப்பட்டு அவ்வழியாக வரும் வாகனங்களை குறிப்பாக பயணிகள் ஆட்டோக்களை சோதனை செய்து உரிய ஓட்டுனர் உரிமம் இல்லதாவர்கள், வாகன உரிமம் இல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

மேலும் ஆட்டோ ஓட்டி வருவோரின் முழு விவரம், பயணிப்போரின் விவரத்தையும் சேகரித்து வருகின்றனர். அத்தியாவசிய தேவையின்றி ஆட்டோவில் சும்மா சுற்றி வந்த நபர்களையும் காவல் துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

 இது போன்ற இரவு நேர கண்காணிப்பு தொடரும் என்றும் சந்தேகப்படியான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி ராஜேஷ் கண்ணண் தெரிவித்துள்ளார்.

Similar News