உள்ளூர் செய்திகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

குரூப்-2 தேர்வுக்கு 11.61 லட்சம் பேர் விண்ணப்பம்- டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்

Published On 2022-03-24 07:33 GMT   |   Update On 2022-03-24 07:33 GMT
குரூப்-2 தேர்வுக்கு இதுவரை 11 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

அரசு பணியிடங்களில் உள்ள காலி இடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் போட்டித் தேர்வு மூலம் நிரப்பி வருகிறது.

பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,239 பணி இடங்களுக்கு குரூப்-2, 2ஏ ஆகிய பதவிகளுக்கான தேர்வு மே மாதம் 21-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டன.

தமிழகம் முழுவதும் உள்ள பட்டதாரிகள், பொறியாளர்கள், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆர்வத்துடன் இந்த பதவிக்கு அதிகளவு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கு நேற்று நள்ளிரவு 12 மணிவரை அவகாசமாகும். அதனால் கடைசி நேரத்தில் நிறைய பேர் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தனர்.

நேற்று மாலை 5 மணிவரை 10 லட்சத்து 94 ஆயிரத்து 412 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த எண்ணிக்கை கடைசி நேரத்தில் மேலும் அதிகரித்தது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘நள்ளிரவு 12 மணிவரை விண்ணப்பிக்க அவகாசம் இருந்ததால் ஒரு சிலர் கடைசி வரையில் விண்ணப்பித்தனர். 12 மணிக்கு மேல் விண்ணப்பித்தாலும் ஏற்காது. இதுவரை 11 லட்சத்து 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பங்களை ஆய்வு செய்து அவர்களுக்கு மையங்களை ஒதுக்கும் பணி நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News