உள்ளூர் செய்திகள்
அனைத்து வார்டுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை- கூட்டத்தில் மேயர் சுந்தரி ராஜா பேச்சு
கடலூர் நகராட்சியில் குப்பைகள் கொட்டுவதற்கு வெள்ளப்பாக்கம் பகுதியில் புதிய கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என மேயர் சுந்தரி ராஜா தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி முதல் மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு முதல் பெண் மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் சுந்தரி ராஜா பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் என்னை முதல் மாநகர பெண் மேயராக தேர்ந்தெடுக்க பரிந்துரை செய்த வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு, நகர்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவிற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மாமன்றம் அனைத்து வகையிலும் மேம்படுத்திட உடனிருக்கும் துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் கடந்த கால தி.மு.க. ஆட்சியில் குடிநீர் தங்கு தடையின்றி மாநகராட்சி பகுதியில் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது சுத்தமான குடிநீர் கிடைக்காமலும் போதிய அடிப்படை வசதி இல்லாமலும் இருந்து வருகின்றன. ஆகையால் இனி வரும் காலங்களில் பொதுமக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கும், சாலை, தெரு மின்விளக்கு மற்றும் அடிப்படை வசதி முழுமையாக கிடைப்பதற்கும், குப்பையில்லா மாநகராட்சியாக மாற்றுவதற்கும் அனைத்து நடவடிக்கையையும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படும்.
கடலூர் மாநகராட்சிக்கு அடிப்படை வசதிகள் செய்து தந்து மேம்படுத்துவதற்கு அனைத்து விதத்திலும் உதவிகரமாக இருப்போம் என வாக்குறுதி அளித்த வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நகர்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேருவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மாமன்ற உறுப்பினர்கள் உங்கள் பகுதியில் உள்ள அனைத்து துறைகள் மற்றும் உங்கள் பகுதிகளை மேம்படுத்திட தேவையான கோரிக்கைகளை தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் , முதல் மாநகராட்சி பெண் மேயர் சுந்தரி ராஜாவுக்கும், துணை மேயர் தாமரைச்செல்வனுக்கும் மற்றும் மாமன்ற உறுப்பினர் அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார். இதனைத்தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கவுன்சிலர் கீதா குணசேகரன் (.தி.மு.க.) எங்கள் வார்டு பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
கவுன்சிலர் பிரகாஷ் (திமுக) எங்கள் பகுதியில் தெரு மின்விளக்கு சரியான முறையில் எரியவில்லை. மேலும் குப்பைகள் சரியான முறையில் அகற்றாமல் உள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரிதா (வி.சி.க) எங்கள் பகுதிகளில் பல்வேறு தெருக்களில் சாலை வசதிகள் மற்றும் வடிகால் வாய்க்கால் பழுதடைந்து உள்ளது. மேலும் மாலை நேரங்களில் கொசு தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர் சுந்தரி ராஜா:- கடலூர் நகராட்சியில் குப்பைகள் கொட்டுவதற்கு வெள்ளப்பாக்கம் பகுதியில் புதிய கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் உங்கள் பகுதியில் உள்ள குறைகளை அதிகாரிகளுடன் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து கூட்டம் நடந்தது.