உள்ளூர் செய்திகள்
வடலூரில் வளையல் கடையில் தீ விபத்து
வடலூரில் வளையல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் சத்யா வீதியில் ஜோதி லேடிஸ் சென்டர் என்ற வளையல் கடை உள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர்.
இரவு 11 மணி அளவில் பூட்டியிருந்த வளையல் கடையிலிருந்து புகை வந்தது. அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனே உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கடைக்கு விரைந்து வந்தார். கடையைத் திறந்து பார்த்த போது தீ பற்றி எரிந்தது.
இதுகுறித்து வடலூர் போலீஸ்நிலையம் மற்றும் குறிஞ்சிப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீ விபத்து நடந்த சமயத்தில் வடலூர் நகர் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.