உள்ளூர் செய்திகள்
சத்துவாச்சாரியில் 32 இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு
சத்துவாச்சாரியில் 32 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. பணிகள் முடிவடைந்த இடங்களில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சாலை பணிகளை துரிதப்படுத்தி அனைத்து தெருக்களையும் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக ஒவ்வொரு மண்டல வாரியாக ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இன்று காலை வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலம் சத்துவாச்சாரி 18-வது வார்டு பகுதியில் மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
கலெக்டர் அலுவலக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி மற்றும் தென்றல் நகர் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அங்குள்ள தெருக்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது.
அதனை சீரமைத்து அனைத்து தெருக்களிலும் சாலை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
2-வது மண்டல உதவி கமிஷனர் வசந்தி 18-வது வார்டு பா.ஜ.க.கவுன்சிலர் சுமதி மனோகரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில்:-
சத்துவாச்சாரி பகுதியில் 32 இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தெருக்களில் தண்ணீர் வீணாக செல்கிறது. தெருக்கள் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கின்றன.
இதனை உடனடியாக சீரமைக்க உத்தரவிட பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் ஓவ்வொரு மண்டலங்களிலும் நடைபெற பணிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஒப்பந்ததாரரிடம் ஆலோசனை செய்யப்பட்டு முழுமையாக அனைத்து தெருக்களும் சீரமைக்கப்படும் என்றார்.