உள்ளூர் செய்திகள்
வெயில்

கடலூரில் பொதுமக்களை வாட்டி வதைக்கும் வெயில்

Published On 2022-03-22 15:50 IST   |   Update On 2022-03-22 15:50:00 IST
சீதோசன நிலை மாற்றத்தால் இரவில் பனிப்பொழிவாலும் பகலில் வெயில் சுட்டெரித்ததாலும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
கடலூர்:

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு மழை பெய்து வந்த நிலையில் தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக வெயில் அதிகமாக அடிக்கத் தொடங்கியது.

குறிப்பாக கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. மேலும் கோடைகாலத்தில் இந்த வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ? என பொதுமக்களிடையே அச்சப்பட வைக்கிறது.

கடந்த வாரத்தில் ஒரு சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. விழுப்புரம் மாவட்டத்தில் வெயிலின் அளவு 90 டிகிரி முதல் 99 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

கடலூரில் அதிகமான வெயில் நிலவுகிறது. குறிப்பாக மதிய வேளைகளில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் இந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள மரத்தின் நிழல் மற்றும் வெயிலின் தாக்கம் குறைந்த இடத்தில் சிறிது நேரம் நின்று செல்கின்றனர்.

சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். மேலும் பொதுமக்கள் குடை பிடித்தபடியும், துணியை தலை மற்றும் முகத்தில் கட்டியபடி சென்றதை காண முடிந்தது.

சீதோசன நிலை மாற்றத்தால் இரவில் பனிப்பொழிவாலும் பகலில் வெயில் சுட்டெரித்ததாலும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காலநிலை மாற்றத்தால் முன்பு அதிகளவு மழை பெய்து பொதுமக்கள் அனைவரும் மிகவும் பாதிப்படைந்தனர்.

தற்போது மழை மற்றும் பணியின் தாக்கம் முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக கோடை காலம் ஆரம்பிக்க உள்ளதால் வெயிலின் தாக்கம் பொதுமக்களிடையே மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News