உள்ளூர் செய்திகள்
விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பு- நஷ்டஈடு கேட்டு 3-வது நாளாக விவசாயிகள் நூதன போராட்டம்
விவசாய நிலங்களில் அமைத்த உயர்மின் கோபுரங்களுக்கு நஷ்டஈடு கேட்டு 3-வது நாளாக விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த பாஞ்சரை கூட்டுச் சாலையில், விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைத்ததற்காக நஷ்டஈடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 3-வது நாளாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள் 3--வது நாளாக தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று அவர்கள் மேற் கொண்ட போராட்டத்தின் போது, ஏர்கலப்பை, நுகத்தடி, மண்வெட்டி உள்ளிட்ட விவசாய கருவிகளுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தங்களின் வாழ்வாதாரத்தை பறிப்பது இப்படியே தொடர்ந்தால், விவசாய கருவிகளுக்கு பூஜை மட்டுமே தங்களால் செய்ய இயலும் என்பதையும், விவசாயம் செய்ய இயலாது என்பதையும் உணர்த்துவதற்காகவே இந்த நூதன போராட்டத்தை மேற்கொண்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.