உள்ளூர் செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவுகள் பற்றி எதுவும் தெரியாது- ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

Published On 2022-03-22 07:08 GMT   |   Update On 2022-03-22 10:26 GMT
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 2-வது நாளாக ஆஜரான ஓ. பன்னீர்செல்வம், இடைத்தேர்தலுக்கான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தெரியும் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை:

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 75 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார். அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியது.

இது தொடர்பாக உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

இந்த ஆணையத்தின் சார்பில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆஜர் ஆகும்படி 8 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஒருமுறை கூட அவர் ஆஜர் ஆகவில்லை.

9-வது முறையாக அனுப்பிய சம்மனை பெற்றுக்கொண்டு நேற்று முதல் நாளாக ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

நேற்று அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மொத்தம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் அளித்தார்.

இன்று 2-வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அவரிடம் ஆணைய வழக்கறிஞர்கள், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் போது ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் கூறினார். நான் அதை சக அமைச்சர்களிடம் தெரிவித்தேன். பொது வெளியில் எங்கும் பேசவில்லை.

திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகள் இடைத்தேர்தல்களில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதும், இடைத்தேர்தல் விண்ணப்ப படிவங்களில் கைரேகை வைத்ததும் எனக்கு தெரியும்.

சிகிச்சையில் இருந்த போது அவருக்கு என்னென்ன உணவுகள் தரப்பட்டது என்பது எனக்கு தெரியாது. அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக எந்த தகவலையும் சசிகலா என்னிடம் தெரிவித்ததில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணையின்போது ஜெயலலிதாவுக்கு இதய பிரச்சினை தொடர்பான கேள்வியை ஆணையத்தின் வக்கீல் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டார். இதற்கு அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மருத்துவம் சார்ந்த கேள்விகள் எதையும் ஓ.பி.எஸ்.சிடம் கேட்கக்கூடாது. மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்கும் போது மருத்துவர்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

Tags:    

Similar News