உள்ளூர் செய்திகள்
போடிமெட்டு வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை படத்தில் காணலாம்.

போடிமெட்டு வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ

Published On 2022-03-22 06:10 GMT   |   Update On 2022-03-22 06:10 GMT
தேனி மாவட்டம் போடிமெட்டு பகுதியில் காட்டுத்தீ தொடர்ந்து எரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்
மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடியை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. 

இந்நிலையில் போடியில் இருந்து மூணாறு செல்லும் போடிமெட்டு மலைசாலையில் 4வது கொண்டை ஊசி   வளைவிற்கு அருகில் சுமார் 50 ஏக்கர் அளவிற்கு காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களும் தமிழகத்திலிருந்து  இருந்து கேரளா செல்லும் வாகனங்களும் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீக்கு இடையே சாலையில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

தீயை அணைப்பதற்கு வனத் துறையினர் போராடி வருகின்றனர். மேலும் போடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் ஆங்காங்கே சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்த நிலையில் தற்போது கேரளாவுக்கு பயணிக்கும் போடிமெட்டு மலைச்சாலையில் அருகாமையிலேயே காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இதே போல் முந்தல் வழியாக செல்லும் குரங்கணி மலைச்சாலையில் மேலப்பரவு, கீழப்பரவு, வடக்கு மலை ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. 

இதில் வடக்கு மலை, குண்டம் பகுதியில் கடந்த 5 நாட்களாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதனால் மலை கிராமங்கள் புகை மூட்டத்தால் சூழ்ந்துள்ளது. தோட்டங்களில் பணிபுரியும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டிபட்டி அருகே உள்ள நாழிமலை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்து போராடி அணைக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து நடந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
Tags:    

Similar News