உள்ளூர் செய்திகள்
சீனிவாசகம்

சங்கரன்கோவில் அருகே போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய 5 பேர் கும்பல்

Published On 2022-03-22 11:39 IST   |   Update On 2022-03-22 11:39:00 IST
சங்கரன்கோவில் அருகே போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா வெங்கடாச்சலபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசகம். இவர் நெல்லை மாவட்டம் மானூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று பணியை முடித்து விட்டு சொந்த ஊருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மாலையில் அருகே உள்ள மற்றொரு கிராமத்திற்கு தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பும் வழியில் 5 பேர் கும்பல் அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்து நின்றது. அந்த கும்பல் அவரை அவதூறாக பேசியதோடு கடுமையாக தாக்கி உள்ளனர்.

மேலும் சீனிவாசகத்தின் தலையை பிடித்து இழுத்து சென்று பாறையில் முட்ட செய்து கொடூரமாக தாக்கி உள்ளனர். பின்னர் அங்கிருந்து 5 பேரும் தப்பி சென்று விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த சீனிவாசகம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் சீனிவாசகத்தை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சீனிவாசகம் அய்யாபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசகத்தை தாக்கிய கும்பல் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் சீனிவாசகத்தை தாக்கியது மீன்துள்ளியை சேர்ந்த அஜித், ரெங்கையாபுரத்தை சேர்ந்த சின்னத்துரை மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சீனிவாசகத்தை எதற்காக தாக்கினார்கள்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News