உள்ளூர் செய்திகள்
வேலூரில் தொழிலதிபர் வீடு புகுந்து 25 பவுன் நகை, பணம் கொள்ளையடித்தவர் கைது
வேலூரில் தொழிலதிபர் வீடு புகுந்து 25 பவுன் நகை, பணம் கொள்ளையடித்த வாலிபரை கேமராவின் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர்.
வேலூர்:
வேலூர் சலவன்பேட்டை பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பூபாலன். டயர் டீலர் நிறுவனம் நடத்திவருகிறார்.
நேற்று முன்தினம் இவர் குடும்பத்தினருடன் வீட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் இவரது வீட்டில் வாலிபர் ஒருவர் புகுந்தார். அவர் வீட்டில் உள்ள அறைகளை திறந்து அங்கு பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டார்.
காலையில் கண் விழித்த பூபாலன் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பூபாலன் வீட்டின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் அதே பகுதியை சேர்ந்த ராகுல் ராபர்ட் (வயது 22). என்பவர் பூபாலன் வீட்டில் இருந்து கொள்ளையடித்து விட்டு வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதனை வைத்து நேற்று அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த ராகுல் ராபர்ட்டை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்து வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் தங்க நகைகள் மற்றும் பணம் எங்கு பதுக்கி வைத்திருக்கிறார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.