உள்ளூர் செய்திகள்
தனியார் கம்பெனி வேன் கவிந்து பெண் தொழிலாளி பலி
தனியார் கம்பெனி வேன் கவிந்து பெண் தொழிலாளி பலியானதால் அரக்கோணம் அருகே உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
நெமிலி:
ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தை சேர்ந்த குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்&1 மற்றும் 8&ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் லட்சுமி வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து கம்பெனி வேனில் வீட்டிற்கு வந்த போது காஞ்சிபுரம் மாவட்டம் பட்டுமுடையார் குப்பம் அருகே திடீரென வேன் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கியவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த லட்சுமியின் குடும்பத்திற்கு அரசு மற்றும் தனியார் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் நிதியுதவி கோரி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று காலை மின்னல் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக வந்து சாலை கிராமத்தில் அரக்கோணம் - சோளிங்கர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் சமரசம் ஏற்பட்டதை அடுத்து மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.