உள்ளூர் செய்திகள்
அரக்கோணம் அருகே விஷம் குடித்து பெண் சாவு
அரக்கோணம் அருகே விஷம் குடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). விவசாயி. இவரது மனைவி லட்சுமி (27). அவர்களுக்கு சுமித்ரா (4), முத்கதஷ் (2) என 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவன் மனைவிக் கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிது. இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
பின்னர் வெங்கடேசன் வெளியே சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான லட்சுமி வீட்டில் இருந்த கொக்கு மருந்தை ஜூசில் கலந்து குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.
பாட்டிலில் மீதியிருந்த விஷத்தை குளிர்பானம் என நினைத்து குழந்தை சுமித்ராவும் எடுத்துக் குடித்துள்ளார்.
அப்போது வீட்டிற்கு வந்த வெங்கடேசன் குழந்தை அழுது கொண்டிருப்பதைக் கண்டு குழந்தையிடம் விசாரித்தார். சுமித்ரா தனக்கு நெஞ்சு எரிச்சலாக உள்ளதாக கூறியுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது அவரது மனைவி லட்சுமி வாயில் நுரை தள்ளியபடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் லட்சுமி மற்றும் குழந்தையை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டாக்டர்கள் பரிசோதித்தபோது லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
குழந்தை மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் சிவதாஸ் விசாரணை நடத்தி வருகிறார்.