உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
திருவண்ணாமலையில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக மாவட்ட காவல் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றது.
அதன்படி தனிப்படைகள் அமைத்தும், ரோந்து போலீசார்கள் நியமித்தும் தொடர் கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் குறும்படம், வரைபட போட்டிகள் நடத்தப்பட்டு பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
போலீசார் மூலம் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும், சமூக வலைதளங்களின் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து நேற்று மாவட்ட காவல் துறை, அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அபூர்வா புட்ஸ் மற்றும் அமோகா ஓட்டல் ஆகியவை இணைந்து போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து “say no to drugs” என்ற விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை நடந்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், சி.என். அண்ணாதுரை எம்.பி., அருணை மருத்துவக்கல்லூரி இயக்குனர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதை செங்கம் சாலை இணையும் பகுதியில் தொடங்கி அபய மண்டபம் அருகில் நிறைவடைந்தது.
இதில் ஆண்கள், பெண்கள் என திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ஆண்கள் பிரிவில் செங்கத்தை சேர்ந்த டி.ரவிக்குமார் முதலிடமும், டி.சக்திவேல் இரண்டாம் இடத்தையும், வேட்டவலத்தை சேர்ந்த ஆர்.ராஜா 3-ம்இடத்தையும் பிடித்தனர்.
அதேபோல் பெண்கள் பிரிவில் திருவண்ணாமலை வி.டி.எஸ். ஜெயின் பள்ளியை சேர்ந்த ஆர்.அபிராமி முதலிடத்தையும், சென்னையை சேர்ந்த நிபியா ஜோசப் 2-ம் இடத்தையும், திருவண்ணாமலையை சேர்ந்த பி.ரூபிகா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்கள் பரிசு தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.