உள்ளூர் செய்திகள்
குடிசை மீது உரசி செல்லும் மின்கம்பிகளை மாற்ற வேண்டும்
திருமருகல் அருகே குடிசை மீது உரசி செல்லும் மின்கம்பிகளை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சி கிடாமங்கலம் கிராமம் உள்ளது.இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கிடாமங்கலம் பகுதியில் இருந்து மின்கம்பங்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் கிடாமங்கலம் எம்.ஜி.ஆர் நகரில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் இருந்து செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகள் தாழ்வாக குடிசை வீடுகளை உரசி செல்கிறது.
இதனால் வேகமாக காற்று வீசும் நேரங்களில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறிகள் பறந்து குடிசை வீடுகளில் விழுகிறது. இதனால் அடிக்கடி குடிசைகள் தீப்பற்றி எரிகிறது. எந்த நேரத்திலும் பெரும் அளவில் தீப்பற்றி விபத்துக்கள் ஏற்படும் என்ற அச்சத்துடனே அப்பகுதி பொதுமக்கள் உள்ளதாக கூறுகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மக்கள் நலன் கருதி உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான மின்கம்பத்தை மாற்றியமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.