உள்ளூர் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் தரமற்ற குளிர்பானங்கள் அழிப்பு
வேலூர் மாவட்டத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த தரமற்ற குளிர்பானங்கள் அழிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தரமற்ற பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
மாநில உணவு பொருள் பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார், வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆகியோரது உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், சிவமணி, கந்தவேல் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைகளில் விற்கப்படும் சமையல் பொருட்களில் காலாவதியான பொருட்கள் விற்கப்படுகிறதா?, பொருட்களில் உற்பத்தி தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் கெட்டுப்போன மற்றும் தரமற்ற சமையல் பொருட்கள் 65 கிலோ, தரமற்ற மற்றும் காலாவதியான குளிர்பானம் 74 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும் 5 கடைகளில் உணவு பொருட்கள் ஆய்வுக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டது. 3 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 7 கடைகளுக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களில் சுமார் 115 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.