உள்ளூர் செய்திகள்
சாலை பணிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம் செய்த காட்சி.

நெமிலி அருகே நெடுஞ்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டம்

Published On 2022-03-19 09:20 GMT   |   Update On 2022-03-19 09:20 GMT
நெமிலி அருகே நிலத்துக்கு இழப்பீடு கேட்டு நெடுஞ்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெமிலி:

சென்னை - பெங்களூர் விரைவுப் சாலை அமைக்கும் பணிகளுக்காக ராணிப்பேட்டை மாவட்டம் வேட்டாங்குளம், பெரப்பேரி, உளியநல்லூர், மகேந்திரவாடி, கோடம்பாக்கம், பாணாவரம் உள்ளிட்ட கிராமங்களில் வருவாய் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அந்தப் பகுதியைச் சுற்றி உள்ள விவசாய நிலங்களை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கையகப்படுத்தினர்.

ஆனால் அதற்குரிய இழப்பீட்டு தொகை இதுநாள் வரை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து பலமுறை மாவட்ட வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று மகேந்திரவாடி சாலை அருகே நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதை தடுத்து நிறுத்தினர்.

மேலும் சாலை போடும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்து, அதன்மீது ஏறிநின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News