உள்ளூர் செய்திகள்
வருமான வரித்துறை ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
வருமான வரித்துறை ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சம்மேளன அகில இந்திய தலைவர் வெங்கடேசன் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:
வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேள சார்பில் வருகிற 28 மற்றும் 29-ந் தேதிகளில் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை வருமான வரித்துறை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அகில இந்திய தலைவர் வெங்கடேசன் கூறுகையில், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நாடு முழுவதும் வருமான வரித்துறையில் நிரப்பப்படாமல் உள்ள 40ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனத்தை விரைந்து வழங்க வேண்டும்.
பணி நியமன விதிகளை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28 மற்றும் 29&ந் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
இதில் நாடு முழுவதும் உள்ள 572 வருமான வரித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் சுமார் 36 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்த போராட்டத்தில் 100 சதவீதம் ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தமிழக மாநில தலைவர் சியாம்நாத், சென்னை அமைப்பு செயலாளர் ஓம்பிரகாஷ்படேல், வேலூர் சரக செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.