உள்ளூர் செய்திகள்
தக்கோலத்தில் ரூ.66 லட்சம் முறைகேடு கூட்டுறவு வங்கி செயலாளர் உள்பட 3 பேர் கைது
தக்கோலத்தில் ரூ.66 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி செயலாளர் உள்பட 3 பேரை ஜெயிலில் அடைத்தனர்.
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் விவசாயிகளுக்கு பயிர் கடன், நகைக்கடன் போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 2015-2018-ம் ஆண்டு காலக்கட்டத்தில் அந்த கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வந்த செயலாளர் விசுவநாதன் (வயது 60), உதவி செயலாளர் சீனிவாசன் (61), எழுத்தர் கஜேந்திரன் (60) ஆகிய விவசாயிகள் செலுத்திய வங்கி கடனை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்காமலும், தனிநபர் வங்கி கடன், நிரந்தர வைப்பு தொகை ஆகிய வங்கி கணக்குகளில் முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் கூட்டுறவு துறை அதிகாரிகள் வங்கியில் தணிக்கை செய்தனர். இதில் 66 லட்சத்து 54 ஆயிரத்து 754 ரூபாய் முறைகேடு செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரும் சஸ்பெண்டு செய்யபட்டனர்.
இந்நிலையில் முறைகேடு செய்த 3 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் சந்திரன் வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜிலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.அவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.