உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. விழா

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் விழா

Published On 2022-03-18 15:53 IST   |   Update On 2022-03-18 15:53:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, இன்று விமரிசையாக நடைபெற்றது.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, இன்று விமரிசையாக நடைபெற்றது.

விழா நிகழ்ச்சிகள், கடந்த வெள்ளிக்கிழமை, அங்குரார்ப்பணம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங் கியது. தொடர்ந்து,  நாள்தோறும் இரவு, வாகன உற்சவங்களும்,சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளுக்கு பின் சந்திரசூடேஸ்வர சாமி, வாகனத்தில் எழுந்தருளி, மேள, தாளம் முழங்க வீதி உலாவாக அழைத்துச் செல்லப்பட்டார்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு சாமிக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், சந்திரசூடேஸ்வரர், யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, ஓசூர் தேர்பேட்டையில் தேரோட்டம் நடந்தது. 

இதில், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் சி. ஆனந்தய்யா ஆகியோர் கலந்து கொண்டு, தேர் வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர். தொடர்ந்து, பக்தர்கள், பக்தி கோஷத்துடன் தேரை இழுத்துச் சென்றனர். 

மேலும் விழாவில், ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

விழாவை யொட்டி, ஓசூர் தேர்பேட்டை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர், நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங் கப்பட்டது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஓசூர் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

நாளை (சனிக்கிழமை) இரவு வாண வேடிக்கைகளுடன், பல்லக்கு உற்சவம், விடிய, விடிய நடைபெறுகிறது. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு, தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடை பெறுகிறது.

Similar News