உள்ளூர் செய்திகள்
மரணம்

செயின் பறிப்பை தடுக்க கொள்ளையனுடன் இளம்பெண் போராடிய போது குழந்தை பலி

Published On 2022-03-18 15:25 IST   |   Update On 2022-03-18 15:25:00 IST
ஆந்திர மாநிலம் கடப்பாவில் செயின் பறிப்பை தடுக்க இளம்பெண் கொள்ளையனுடன் போராடியதில் குழந்தை இடுப்பில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராமச்சந்திரா புரத்தை சேர்ந்தவர் பாரதி (வயது 28). பாரதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருந்தது. நேற்று காலை குழந்தைக்கு உணவு வழங்குவதற்காக மாடிக்கு தூக்கிச் சென்றார். உணவு வழங்கி விட்டு மீண்டும் மாடிப்படி வழியாக கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தார்.

அப்போது மாடிப்படியில் எதிரே வந்த மர்மநபர் திடீரென பாரதியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றார்.

இதனால் திடுக்கிட்டு அதிர்ச்சியடைந்த பாரதி செயினை கெட்டியாக பிடித்துகொண்டு போராடினார்.

அப்போது பாரதி இடுப்பில் வைத்திருந்த குழந்தை கை தவறி 12 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது.

இதில் படுகாயமடைந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தது. இதனைக்கண்ட செயின் பறிப்பு கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

கீழே விழுந்து இறந்த குழந்தையை பார்த்து பாரதி கதறி அழுது துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடப்பா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் செயின் பறிப்பு கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Similar News