உள்ளூர் செய்திகள்
வேலூர் பள்ளியில் கத்தியுடன் புகுந்து சிறுவர்கள் ரகளை
வேலூர் பள்ளியில் கத்தியுடன் புகுந்து சிறுவர்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் மாநகர பகுதியில் உள்ள சிறுவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் எல்லை மீறி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
கடந்த சில நாட்களாக சேண்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் கஞ்சா போதையில் சிறுவர்கள் ரகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேண்பாக்கத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த 100&க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக அந்த பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுவர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் கற்கள், முட்டை, தக்காளி உள்ளிட்டவற்றை வீசியும், பள்ளி மாணவர்களை கேலி, கிண்டல் செய்தும் வந்துள்ளனர். இதனைக்கண்ட பள்ளி ஆசிரியர்கள் அந்த சிறுவர்களை கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி வளாகத்துக்குள் 3 சிறுவர்கள் புகுந்து திடீரென கத்தியை காட்டி மாணவர்களை மிரட்டி உள்ளனர். அதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பின்னர் சுதாரித்து 3 பேரையும் மடக்கி பிடித்தனர். இதற்கிடையே அந்த வழியாக ரோந்து வந்த வேலூர் வடக்கு போலீசாரிடம் 3 சிறுவர்களும் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த 12,14,15 வயதுடைய சிறுவர்கள் என்பதும் 3 பேரும் மது, கஞ்சா போதையில் கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணா மலை மாவட்டங்களில் கஞ்சா, கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல், இளைஞர்களையும், ஏழை மாணவர்களையும் குறிவைத்து விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
குறிப்பாக தமிழக& ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டத்திற்கு, ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு, வேலூர், மாவட்டத்தில் சிறு, சிறு பொட்டலங்களில் அடைத்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள், பள்ளிப்படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டு, தீய பழக்க வழக்கங்களில் ஈடுபடத் தொடங்கி விடுகின்றனர். மாநகர பகுதியில் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் பள்ளி பகுதியில் வெளியே இருந்து வரும் சிறுவர்கள் ரவுடிசம் செய்வதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதில் தனி கவனம் செலுத்தி பள்ளிகளில் ரகளையில் ஈடுபடும் அவர்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது எந்தவித பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
போதை பொருட்கள் பயன்பாடு குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-
வீட்டில் பெரியவர்கள், இளம் பருவத்தினரிடம், நேரம் ஒதுக்கி அவர்களுடன் பழக வேண்டும்.
அவர்கள் தீய பழகத்திற்கு அடிமையாகி இருந்தாலும், அவர்களை மீட்க முடியும். போதை பொருட்கள் குறித்து போதிய அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதோடு போதை பொருட்கள் கடத்தலை தடுக்க அதிரடி சோதனை நடத்த வேண்டும். அதில் தொடர்புடையவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.