குடிபோதையில் தகராறு தம்பியை குத்திக் கொன்ற பால் வேன் டிரைவர்
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிகுப்பத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 34). இவர் தனியார் பால் விற்பனை நிலையத்தில் வேன் ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இவரது தம்பி நீலமேகம் (32). இவருக்கு திருமணம் ஆகவில்லை. வேலை எதற்கும் செல்லாமல் பலரிடம் கடன் வாங்கி குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவார். இவருக்கு கடன் கொடுத்தவர்கள் வீட்டில் வந்து தினசரி பணத்தை திருப்பிகேட்டு தொந்தரவு கொடுப்பார்கள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கிய நீலமேகம் அந்த பணத்தை வைத்துக்கொண்டு குடித்துவிட்டு தினசரி வீட்டில் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று இரவு இதேபோல குடிபோதையில் வீட்டுக்கு வந்த நீலமேகம் தனது பெற்றோரிடமும், தனசேகரிடமும் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த தனசேகர் அருகே கிடந்த கத்தியை எடுத்து நீலமேகத்தை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த நீலமேகம் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பிணமானார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
தம்பியை குத்திக் கொன்ற தனசேகரை கைது செய்த போலீசார் இந்த கொலை தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பியை அண்ணன் குத்தி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.