உள்ளூர் செய்திகள்
வேலூர் சத்துவாச்சாரியில் பாலாற்றங்கரையில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்த கண்டக்டர்
வேலூர் சத்துவாச்சாரியில் பாலாற்றங்கரையில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்த கண்டக்டர் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி மடம் தெருவை சேர்ந்தவர் புரட்சி வேந்தன் (வயது 61). அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோய் மற்றும் பிபி இருந்து வந்ததால் அதற்கு மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
இந்த வயதிலேயே தனக்கு நோய் வந்துவிட்டது என்று புலம்பியவாறு அதற்கு மாத்திரை சாப்பிட்டு தானாக பேசி வந்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக மாத்திரை சாப்பிடாமல் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை வாக்கிங் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இந்த நிலையில் சத்துவாச்சாரி கணபதி நகர் அருகே பாலாற்றங்கரையில் உள்ள கிணற்றில் புரட்சி வேந்தன் பிணமாக மிதந்தார்.
சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். புரட்சி வேந்தனுக்கு கலா என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.