உள்ளூர் செய்திகள்
வேலூரில் பரபரப்பை ஏற்படுத்திய சூர்யா, ஜி.ஜி. ரமேஷ் கொலை வழக்கில் கைதான 8 பேர் விடுவிப்பு
வேலூரில் பரபரப்பை ஏற்படுத்திய சூர்யா, ஜி.ஜி. ரமேஷ் கொலையில் கைதான 8 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச் சாரியை சேர்ந்தவர் சூர்யா என்கிற சுரேஷ்குமார் (வயது 37), ரியல் எஸ்டேட் அதிபர். வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அலுவலகம் அமைத்து தொழில் நடத்தி வந்தார்.
கடந்த 2010-ம் ஆண்டு இவரின் அலுவலகத்துக்குள் ரவுடி கும்பல் புகுந்தது. அங்கிருந்த சூர்யாவின் முகத்தில் ரவுடி கும்பல் மிளகாய் பொடி தூவி, கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது.
இந்த கொலை குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த கொலை வழக்கில் சைதாப்பேட்டையைச் சேர்ந்த சரத் என்கிற சரத்குமார் (33), தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் (36), குப்பன் என்கிற சதீஷ்குமார் (35), சசிகுமார் (33), சீனிவாசன் (36), பாலாஜி (37), ரவுடி மகா என்கிற மகாலிங்கம் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல், வேலு£ர் அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலரான ஜி.ஜி.ரவியின் தம்பி ஜி.ஜி.ரமேஷ் (46), பைனான்சியர். இவரை 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆற்காடு ரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து வேலு£ர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாவின் கூட்டாளிகளான தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த குப்பன் என்கிற சதீஷ் குமார் (35), சசிகுமார் (33), வெங்கடேசன் (39), நாகராஜ் (எ) முசல் நாகராஜ் (39), கேரளாவைச் சேர்ந்த ரகு (50) சைதாப்பேட்டையைச் சேர்ந்த சரத்குமார் (33) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சூர்யா, ஜி.ஜி. ரமேஷ் ரவுடிகளால் கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் வேலு£ரில் இன்றளவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த இரு கொலை வழக்கின் விசாரணைகள் மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகளின் விசாரணைக்கு இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு சூர்யா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி மகா (எ) மகாலிங்கம் கொலை செய்யப்பட்டார். அதன் காரணமாக அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதேபோல், ஜி.ஜி. ரமேஷ் கொலை வழக்கு குற்றவாளியான வெங்கசேடன் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இறந்தார். அதனால், அவர் அந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த இரு வழக்குகளும் நேற்று நீதிபதி ரேவதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே, அரசு தரப்பில் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.