உள்ளூர் செய்திகள்
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இன்று காலை திரண்ட பக்தர்கள்.

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல ஆர்வமுடன் வருகை தரும்பக்தர்கள்

Published On 2022-03-17 15:01 IST   |   Update On 2022-03-17 15:01:00 IST
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவனின் அக்னி தலமாக போற்றப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். 

மேலும் வெளிநாட்டு பக்தர்கள் பலர் தங்கி தியானம் உள்ளிட்ட ஆன்மீக வழிபாட்டு முறைகளை கடைப்பிடித்து மன அமைதி பெறுகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தற்போது கொரோனா வின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் திருவண்ணா மலையில் பக்தர்கள் மீண்டும் கிரிவலம் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்றனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு கிரிவலப்பாதையில் துப்புரவு பணிகள் மற்றும் கழிவறைகள் சுத்தம் செய்யும் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்றன.

இந்த நிலையில் இன்று மதியம் பங்குனி மாத பவுர்ணமி தொடங்கவுள்ள நிலையில் காலையிலேயே பக்தர்கள் வருகை தரத் தொடங்கி விட்டனர். அவர்கள் கோவில் முன்பு நின்று தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்று வருகின்றனர். கிரிவலம் சென்று வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

பக்தர்கள் வருகையை முன்னிட்டு ஆன்மீக அமைப்புகள் சார்பில் கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் அன்ன தானங்கள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சாலையோரங்களில் சிறு சிறு கடைகள் பல தற்காலிகமாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கற்பூரம் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. பக்தர்கள் எந்தவித தடையும் இன்றி மனமகிழ்ச்சியுடன் கிரிவலம் சென்று வருகின்றனர்.

இன்று மாலை பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News