உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் மருத்துவத்துறை ஊழியர்வங்கி கணக்கில் இருந்து ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் அபகரிப்பு
திருவண்ணாமலையில் பான்கார்டு எண்ணை இணைப்பதாக கூறி மருத்துவத்துறை ஊழியர் வங்கி கணக்கில் இருந்து ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் அபகரிப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை சமுத்திரம் நகரைச் சேர்ந்தவர் முகமது சபியுல்லா (வயது52) இவர் மருத்துவத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவரது செல்போன் எண்ணுக்கு நேற்று ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் தங்கள் வங்கி கணக்குடன் பான் கார்டு நம்பரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு 2 நாட்களில் முடக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் பான் எண்ணை இணைப்பதற்கு குறுஞ்செய்தி உள்ள இணைப்பை பயன்படுத்தும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த இணைப்பை முகமது சபியுல்லா தொடர்பு கொண்டுள்ளார். அப்போது கஸ்டமர் கேர் சேவை பிரிவில் இருந்து பேசுவதாக ஒரு ஆண் பேசி உள்ளார்.
அவர் குறிப்பிட்ட வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்து பான் கார்டு நம்பர் உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளார். அப்போது வங்கி கணக்குடன் இணைப்பதற்கு ஒரு ஓ.டி.பி. எண் வரும். அதை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுபோல தொடர்ந்து 5 முறை ஓ.டி.பி.எண் கேட்டு சரி பார்ப்பது போல தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில் முகமது சபியுல்லா வங்கிக் கணக்கிலிருந்து ரூ.6 லட்சத்து 95 ஆயிரத்து 788 இன்டர்நெட் பேங்கிங் மூலம் அபகரித்துள்ளார்.
இணைப்பை துண்டித்த பிறகு பணம் பறிபோன எஸ்.எம்.எஸ் அடுத்தடுத்து வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகமது சபியுல்லா சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று முறையிட்டுள்ளார்.
ஆனாலும் நூதன முறையில் நடந்துள்ள இந்த மோசடியை நேரடியாக தங்களால் கண்டறிய முடியாது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து முகமதுசபியுல்லா திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபர் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
இந்தச் சம்பவம் திருவண்ணாமலை பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.