உள்ளூர் செய்திகள்
போக்சோ சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் விஸ்வதாஸ் நகரை சேர்ந்தவர் பரனீதரன். இவரது மனைவி சசிகலா (வயது28). இவர்களது வீட்டின் அருகில் தனலெட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது சகோதரன் செந்தில்குமார். இவர் திருச்சியில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவிற்காக செந்தில் குமார், சசிகலா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சசிகலாவின் நான்கு வயது மகளிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.
இது குறித்து சசிகலா கொடுத்த புகாரின்பேரில், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி செந்தில்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.
இதே போல் குளத்தூர் தாலுகா, வெள்ளனூர் காவல் சரகத்திற்குட்பட்ட மேல முத்துடையான் பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (42). இவரது 9&ம் வகுப்பு படித்து வரும் மகளை, அதே பகுதியை சேர்ந்த முத்து(67) என்பவர் பாலியியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இதுகுறித்து பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி முத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.