உள்ளூர் செய்திகள்
.

ஓசூர் அந்திவாடி விளையாட்டு அரங்கத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் உடற்பயிற்சி கூடம்

Published On 2022-03-15 15:36 IST   |   Update On 2022-03-15 15:36:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடி விளையாட்டு அரங்கத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் உடற்பயிற்சி கூடம் அமைய உள்ளது.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடி விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி பிரிவு சார்பில் ரூ.3 கோடியே 69 லட்சத்து, 50,000 மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், கூடைப்பந்து மைதானம் மற்றும் நடைபாதை ஆகியவற்றை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இதையடுத்து, ஓசூர் அந்திவாடி புதிய விளையாட்டு அரங்கத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் குத்து விளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் நலன்கருதி இந்த விளையாட்டு அங்கத்தில் கூடைப்பந்து மைதானம் அமைக்கவும் உள்விளையாட்டு அரங்கம் அமைத்து அதில் கைப்பந்து, டேபிள் டென்னிஸ், இறகு பந்து விளையாட தேவையான கட்டமைப்பு அமைக்கவும், உடற்பயிற்சி கூடம் மற்றும் நடைபாதை அமைக்க இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு, நேற்று பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இங்கு 177.65 சதுர மீட்டர் பரப்பளவில் உடற்பயிற்சி கூடம், 608 சதுர மீட்டர் பரப்பளவில் கூடைப்பந்து மைதானம் மற்றும் 800 மீட்டர் நீளத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட விளையா அலுவலர் உமாசங்கர், மற்றும் விளையாட்டு பயிற்சியாளர்களும், மாநகராட்சி கவுன்சிலர் பாக்கியலட்சுமி குப்புசாமி, பூனப்பள்ளி கிளை செயலாளர் மஞ்சுநாதப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News