உள்ளூர் செய்திகள்
விழாவில் நகராட்சித் தலைவர்களை அமைச்சர் எ.வ.வேலு வாழ்த்திய போது எடுத்த படம்.

திருவண்ணாமலை வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்- எ.வ.வேலு பேச்சு

Published On 2022-03-15 15:11 IST   |   Update On 2022-03-15 15:11:00 IST
திருவண்ணாமலை வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என நகராட்சி தலைவர் பணிதொடக்க விழாவில் எ.வ.வேலு பேசினார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் நகரமன்றத் தலைவர், துணைத் தலைவர் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை வாழ்த்தி பேசினார். நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், துணைத் தலைவர் ராஜாங்கம் ஆகியோரின் பணியை தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலை நகர மன்றம் பழம்பெருமை வாய்ந்தது. இதற்கு முன்பு 13 பேர் தலைவராக இருந்து பணியாற்றி உள்ளனர். தற்போது முதன்முதலாக பெண் தலைவர் பொறுப்பை ஏற்கிறார். 

திருவண்ணாமலை வளர்ச்சிக்கு அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இங்கு எந்த வார்டும் வளர்ச்சிப்பணியில் புறக்கணிக்கப்படாது. 

அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஒருவரை ஒருவர் பிரித்துக் கொள்ளக்கூடாது. ஒற்றுமையாக மக்களின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும்.

திருவண்ணாமலைக்கு வெளிநாட்டினர், பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள் பலர் வருகின்றனர். எனவே நகரத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கிரிவல பாதையின் சில இடங்கள் சில ஊராட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலும் பக்தர்களின் பார்வையில் அது நகராட்சிக்கு உட்பட்ட இடமாக தெரிகிறது. 

எனவே கிரிவலப்பாதை நகராட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர துறை சார்ந்த அமைச்சர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை வளர்ந்து வரும் நகராட்சியாக உள்ளதாலும், மக்கள் தொகை அதிகரிப்பாலும் அடிக்கடி தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. இது குறித்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தேன். அவர் இந்த பிரச்சினையை தீர்க்க எவ்வளவு தொகை தேவைப்படும் என்று கேட்டார். நான் ரூ.5,500 கோடி என்று தெரிவித்தேன். 

உடனடியாக அவர் காவிரி குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு கையெழுத்திட்டார். அதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடக்க இருக்கிறது. அதில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இதையடுத்து நாமும் காவிரி கூட்டுக் குடிநீர் குடிக்க போகிறோம்.

இந்த திட்டம் செயல்படுத்தும் போது அதை நீங்கள் முறைப்படுத்த வேண்டும். ஏனெனில் அதிகாரம் உங்கள் கையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஜோதி, சரவணன், மு.பெ.கிரி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் எம்.பி. வேணுகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன், நகரச் செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி மேலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

Similar News