உள்ளூர் செய்திகள்
எஸ்பி வேலுமணி

ரூ.58 கோடிக்கு சொத்து குவித்ததாக எஸ்.பி.வேலுமணி மீது 2வது வழக்கு- எப்.ஐ.ஆரில் தகவல்

Published On 2022-03-15 06:36 GMT   |   Update On 2022-03-15 06:36 GMT
எஸ்.பி.வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த பணத்தை வேறு நிறுவனங்களில் திருப்பி விட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை:

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது 2-வது முறையாக வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தயார் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நம்ப தகுந்த இடங்களில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை, திருப்பூர், சேலம், சென்னை மற்றும் கேரளா உள்பட பல இடங்களில் சொத்துக்கள் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், ஹேமலதா (அன்பரசன் மனைவி), சந்திரசேகர், சந்திரபிரகாஷ், கிருஷ்ணவேணி, சுந்தரி, கார்த்திக், விஷ்ணுவர்தன், சரவணகுமார் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீமகா கணபதி ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட், கான்ஸ்ட்ரோ மால் குட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆலம் ரோடு அண்டு டைமண்டு பிரைவேட் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் எஸ்.பி.வேலுமணி 23.5.2016-ம் ஆண்டு முதல் 6.5.2021-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த கால கட்டத்தில் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

அப்போது பல தகவல்கள் தெரிய வந்தது. எஸ்.பி. வேலுமணியின் தந்தை மறைந்த பழனிசாமி மில் தொழிலாளியாக பணியாற்றியவர். அவருக்கு குறைந்தபட்ச வருமானமே கிடைத்தது.

எஸ்.பி.வேலுமணியின் தாயார் மயிலாத்தாள் மதிய உணவு திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். அவருக்கும் போதுமான அளவுக்கு வருமானம் கிடையாது.

எஸ்.பி.வேலுமணி 1991-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை கோவை மாநகராட்சியில் காண்டிராக்டராக பதிவு செய்து இருந்தார். 1999-ம் ஆண்டு அவர் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். அதில் அவரது சகோதரரும் பங்குதாரராக இருந்தார்.

2006-ம் ஆண்டு முதல் அவர் 4 தடவை எம்.எல்.ஏ.வாக உள்ளார். அமைச்சராகவும், சென்னை குடிநீர் வாரிய தலைவராகவும் பணிபுரிந்த அவர் சில நிறுவனங்கள் தொடங்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார்.

இதன் மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார். தனது பெயரிலும், தனது குடும்பத்தினர், உறவினர் பெயரிலும் அவர் 15.3.2021-ம் ஆண்டு தேதிய நிலவரப்படி 58 கோடியே 23 லட்சத்து 97 ஆயிரத்து 52 ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்துள்ளார். இது 3,928 சதவீதம் அதிகமாகும்.

எஸ்.பி.வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த பணத்தை வேறு நிறுவனங்களில் திருப்பி விட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குற்றம் சுமத்தப்பட்டவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோவை லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் எழிலரசி பெயரில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருக்கிறது.


Tags:    

Similar News