உள்ளூர் செய்திகள்
பாகூர் அருகே பதட்டம் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
பாகூர் அருகே கரையாம்புத்தூர் காலனி பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மகன் குணால் (வயது 18). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
குணால் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று மது குடித்துவிட்டு பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது திரவுபதி அம்மன் கோவில் வழியாக வந்து கொண்டிருந்த போது அங்கு நின்றிருந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த ரவிச்சந்திரன், தினகரன், உதயா, எத்திராஜ், பூபதி ஆகிய 5 பேர் கொண்ட கும்பல், குணாலிடம் ஏன் ஏன் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வருகிறாய்? என்று கேட்டு தடியாலும், கல்லாலும் தாக்கியுள்ளனர். மேலும் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.
குணாலை தாக்கியது தெரியவந்ததும் கரையம் புத்தூர் காலனியை சேர்ந்த 100 பேர் திரவுபதியம்மன் கோவில் அருகே திரண்டனர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
தகவல் அறிந்தவுடன் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையில் பாகூர்-கிருமாம்பாக்கம் மற்றும் கரையாம் புத்தூர் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இரவு சுமார் 50 பேர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு குணாலை தாக்கியவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் அப்பகுதியில் மேலும் பதட்டமானது.
இது சம்பந்தமாக கரையம்புத்தூர் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இந்த மோதல் காரணமாக கரையாம்புத்தூர் பகுதியில் 2-வது நாளாக இன்றும் பதட்டம் நிலவுகிறது. அங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இரு தரப்பினரிட மும் போலீசார் சமாதானம் கூட்டம் நடத்தி வருகின்றனர்.