உள்ளூர் செய்திகள்
சேத்துப்பட்டு அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்
சேத்துப்பட்டு அருகே ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் போளுர் சாலையில் அரசு பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் சேத்துப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் சேத்துப்பட்டு தாலுகா நெடுங்குணம் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் புதிய அரசு பொது மருத்துவமனை கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு நிலத்தில் தனியார் ஆக்கிரமிப்புகள் நெல்பயிர் மற்றும் வீடு கட்டியுள்ளது தெரிந்தது. இதை அகற்ற மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின்பேரில் சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், மண்டல துணை தாசில்தார் கோமதி, வருவாய் ஆய்வாளர்கள் ஹேமலதா, கன்னியப்பன் கிராம நிர்வாக அலுவலர்கள் பஷீர் முருகானந்தம் அப்சர் கலைவாணன் மற்றும் நில அளவை துறை ஊழியர்கள் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடு மற்றும் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிரை அகற்றினர்.