உள்ளூர் செய்திகள்
கைதி தப்பி ஓட்டம்

கள்ளக்குறிச்சி அருகே ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓட்டம்

Published On 2022-03-12 10:25 GMT   |   Update On 2022-03-12 10:25 GMT
கள்ளக்குறிச்சி அருகே தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே குப்பிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா என்கிற பைனான்ஸ் ராஜா (வயது 45) இவர் கரூர் மாவட்டம் வெள்ளியனை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை மற்றும் திருட்டு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 2015-ம் ஆண்டு முதல் கடலூர் மத்திய சிறையில் இருந்து வருகிறார்.

நேற்று கடலூர் மத்திய சிறையில் இருந்து ராஜாவை கடலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர்கள் ஆம்ஸ்ட்ராங், உதயகுமார், நேதாஜி ஆகியோர் மற்றொரு வழக்கு சம்பந்தமாக கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்றனர்.

அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு ஆயுதப்படை போலீசார் 3 பேரும் ராஜாவை மீண்டும் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர். அப்போது அரவக்குறிச்சியில் இருந்து சேலத்திற்கு வந்த அவர்கள் மீண்டும் சேலத்தில் இருந்து கடலூர் நோக்கி அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

தியாகதுருகம் புறவழிச்சாலையில் வந்தபோது கைதி ராஜாவை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து தியாகதுருகம் மற்றும் கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ் மற்றும் முருகேசன் தலைமையிலான போலீசார் கைதி ராஜா வீரசோழபுரம் சுங்கச்சாவடி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கி தப்பியிருக்கலாமா? வேறு எந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இருப்பார்? எப்படி இறங்கி இருப்பார்? என தேடி வருகிறார்கள். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ராஜா தப்பிச்சென்ற படம் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை செய்து, தப்பி ஓடிய கைதி ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News