உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

விராலிமலை முருகன் கோவிலில் வருடாபிஷேகம்

Published On 2022-03-12 15:06 IST   |   Update On 2022-03-12 15:06:00 IST
விராலிமலை முருகன் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெறுகிறது
புதுக்கோட்டை: 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவிலில் வருடாபிஷேகம் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 

மேலும் இத்தலமானது அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்திகளை வழங்கி திருபுகழ் பாட வைத்த தலமாகவும், நாரதருக்கு பாவவிமோசனம் வழங்கிய தலமாகவும் விளங்கி வருகிறது. 

இத்தனை சிறப்புமிக்க இக்கோவிலின் கும்பாபிஷேக விழாவானது கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெகு விமர்சியாக நடைபெற்றது. தற்போது கும்பாபிஷேக விழா முடிந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் வரும் 14&ந் தேதி (திங்கள்கிழமை)யன்று மலைமேல் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு வருடாபிஷேகம் முதல் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. 

இதனையடுத்து வரும் நாளை  (ஞாயிற்றுகிழமை) முதல்கால யாகபூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து 14-ந் தேதி (திங்கள் கிழமை) காலை 9 மணிக்கு 2 ம் கால யாகபூஜை தொடங்கி மலைமேல் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். 

அதனைத் தொடர்ந்து மதியம் மலையடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு அன்று மாலை 6 மணிக்கு புகழ்பெற்ற நாதஸ்வரம் மற்றும்  தவிலிசை கலைஞர்களின் மங்கள இசையுடன் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருவீதி உலா நடைபெறும்.

Similar News