உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் மாநகராட்சிக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மும்முரம்

Published On 2022-03-11 06:07 GMT   |   Update On 2022-03-11 06:07 GMT
ஆண்டுதோறும் மாநகராட்சியின் வரவு-செலவு திட்டம் எனப்படும் பட்ஜெட் தயாரித்து மன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை கட்டணம், மூலதன வருவாய் இனங்கள் மற்றும் மத்திய மாநில அரசுகளின் நிதி ஆதாரங்கள் மூலம் வருவாய் கிடைக்கிறது. 

நிர்வாக செலவினங்கள், மின் கட்டணம், குடிநீர் கட்டணம், சாலை மற்றும் கட்டிடம் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களும், வளர்ச்சிப்பணிகளுக்கான திட்டச் செலவுகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆண்டுதோறும் மாநகராட்சியின் வரவு-செலவு திட்டம் எனப்படும் பட்ஜெட் தயாரித்து மன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அடுத்த நிதியாண்டுக்கான எதிர்நோக்கும் வரவினம் மற்றும் செலவுகள் குறித்த விவரம் இதில் இடம் பெறும். 

அவ்வகையில் வரும் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகளில்  மாநகராட்சி அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த நிதியாண்டில் ஏறத்தாழ ரூ.1,448 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

இது உபரி பட்ஜெட்டாக இருந்தது. மாநகராட்சியின் பட்ஜெட் தயாரிப்புக்கு பல்வேறு நிர்வாக குழுக்களின் கருத்து பெற வேண்டியுள்ளது. 

நிதிக்குழு, கல்விக்குழு, வரி மறு சீராய்வு முறையீட்டு குழு, நகரமைப்புக்குழு உள்ளிட்ட குழுக்கள், தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களை தலைவராகவும், உறுப்பினர்களாகவும் கொண்டு செயல்படும். மேலும் மண்டல வாரியாகவும் புள்ளி விவரங்கள் இடம் பெற வேண்டும்.

மாநகராட்சி கவுன்சிலர்கள் முதல் கூட்டம் நடந்த பின்பே இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே நடப்பு வாரத்தில் முதல் கூட்டம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நகரின் அடிப்படை மற்றும் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு புதிய திட்டங்களை இந்த பட்ஜெட் அறிவிப்பில் வெளியிட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News