உள்ளூர் செய்திகள்
ஆணிப்படுக்கையில் யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் இன்ஸ்பெக்டர்
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் இன்ஸ்பெக்டர் ஆணிப்படுக்கையில் யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை:
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செயல்பட்டுவரும் உதவும் கரங்கள் ரமணா மறுவாழ்வு மையத்தில் விழிப்புணர்வு யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலர் ஜி.கண்ணகி தலைமை தாங்கினார். ஸ்ரீ ஜெயம் தொண்டுநிறுவனம் மோகன் குமார், தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் பி.மதன்மோகன், மண்டலத் தலைவர் ஆர்.சிவராமன், மாவட்ட தலைவர் க.சா.முருகன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் சித்ரப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் பெண் குழந்தை களுக்கு வன்கொடுமைகள் நடப்பதை தடுக்க வேண்டும்., பெண்கள் மன உறுதி, உடல் வலிமையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் (சென்னை) இன்ஸ்பெக்டர் காஞ்சனா (வயது49) அவரது மகள் வர்ஷினி ஆகிய இருவரும் ஆணி படுக்கையில் 10நிமிடங்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.