உள்ளூர் செய்திகள்
தலைமை செயலகத்தை திருச்சிக்கு மாற்றிட விவசாய சங்கத்தினர் கோரிக்கை
தலைமை செயலகத்தை திருச்சிக்கு மாற்றிட விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதியில் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகு விவசாயிகள் ஏராளமானோர் ஒன்றிணைந்து தங்கள் எதிர்கால நலன் கருதி, கல்லணைக் கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு என்ற சங்கத்தை உருவாக் கியுள்ளனர்.
இதில் தலைவராக கொக்கு மடை ரமேஷ், செயலாளர் மற்றும் பொருளாளர்களாக வீரப்பன், கோவிந்தராஜ் ஆகியோர் செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் சங்கம் சார்பில், தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
மனுவில், ஆங்கிலேயர் காலத்தில் சென்னை மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு, தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகியன இயங்கி வந்தன. அதன் பின்பு தமிழகம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட போதும் இன்றளவும் சென்னையே தலைநகராக செயல்பட்டு வருகிறது.
இதனால் தமிழகத்தின் கடைகோடி பகுதிகளில் அரசின் எந்த திட்டங்களும் முழுமையாக சென்றடைவதில்லை. குறிப்பாக விவசாயிகள் பயன் பெறும் வகையில் தாமிரபரணி, வைகை, காவேரி போன்ற நதிகள், ஆறுகள் சென்றடையும் பாதைகள் சரி செய்யப்படாமல் கடைமடை பகுதி விவசாயிகளின் வாழ்கை கேள்விக்குறியாக உள்ளது. இது அரசின் கவனத்திற்கு எட்டுவதும் இல்லை,
எனவே முதல்வர் தமிழக மக்களின் நலன் கருதி, அனைத்து பகுதிக்கும் அரசின் சலுகைகள் சென்றடையும் வகையில், தமிழகத்தின் மைய பகுதியான திருச்சிக்கு தலைமை செயலகத்தை மாற்றி அமைத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.