உள்ளூர் செய்திகள்
நலத்திட்ட உதவிகளை வழங்கிய எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

சசிகலாவால் எழுந்துள்ள திடீர் சர்ச்சை: ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி ஆலோசனை

Published On 2022-03-08 08:23 GMT   |   Update On 2022-03-08 10:39 GMT
சசிகலாவை கட்சிக்குள் சேர்ப்பது குறித்த சர்ச்சை பேச்சுக்கு பின்னர் தலைமை கழகத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து கொண்டது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை:

அ.தி.மு.க.வில் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேனி மாவட்ட அ.தி.மு.க.வினர் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றினர்.

மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சம்பவம் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததால் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி தொடர்பு கொண்டு பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றார். கட்சிக்குள் இத்தகைய செயலை அனுமதித்தால் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அவரிடம் விளக்கி கூறினார்.

அதனால் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று கூறிய நிர்வாகிகள் மீதும், அவரை சந்தித்த ராஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

கட்சி நலனை கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்தை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டு கட்சி கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மதித்தார்.

அதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி வெளியிடப்பட்ட அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டனர்.

அதனைத் தொடர்ந்து சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய ராஜா உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நேற்று இரவே சென்னை வந்தனர். இருவரும் இன்று காலையில் தலைமை கழகத்திற்கு வந்தனர். அவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கட்சி அலுவலகத்துக்குள் சென்று தனி அறையில் சிறிது நேரம் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்தும் சமீபத்தில் ஏற்படுத்திய சர்ச்சை குறித்து பேசியதாக தெரிகிறது. அதன் பின்னர் இருவரும் தனித்தனியாக புறப்பட்டு சென்றனர்.

சசிகலாவை கட்சிக்குள் சேர்ப்பது குறித்த சர்ச்சை பேச்சுக்கு பின்னர் தலைமை கழகத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து கொண்டது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் இருபெரும் தலைவர்கள் இருக்கின்றனர். முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களிடம்தான் இருக்கிறது. சசிகலா உட்பட அனைவர் தொடர்பாகவும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுப்படி நடப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News